கோயம்புத்தூர்:கோயம்புத்தூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில் இருந்து விமான மூலம் கோயம்புத்தூர் வந்தார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது, தவறானது.
கடைந்தெடுத்த சனாதன பேர் வழி:ஆளுநரின் இந்த மக்கள் விரோதப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ரவி கடந்த நவம்பர் 13ஆம் தேதி 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ள நிலையில், நேற்று ஒரு நாள் அமர்வாக நடந்தேறிய சிறப்பு கூட்டத்தொடரில், தமிழக முதலமைச்சர் அந்த சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியுள்ளார். ஆளுநர் ரவி, கடைந்தெடுத்த சனாதன பேர்வழியாக உள்ளார்.
ராஜ்பவன் ஏன் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கக் கூடாது?திமுகவிற்கு எதிராக உள்ள அவர் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களை எதிரிகளாக பார்க்கிறார். மேலும், அந்த பெயர்களை அருவறுப்பாக பார்க்கிறார். மற்ற மாநில ஆளுநர்களை விட, ஆளுநர் ரவி மிக மோசமாக நடந்து கொள்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றிய மசோதாக்களை திருப்பி அனுப்பி, நெருக்கடிகளை உருவாக்குவதாக எண்ணுகிறார். அவருக்கு வன்மையான கண்டனங்களை கூறிக் கொள்கிறோம்.