தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனிமவளக் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் செயல்பட்டுவரும் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அப்பகுதியிலுள்ள கனிமவளங்களை சுரண்டிவருவதால், ஏராளமான பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருவதாகவும், செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

various organizations protest to urging prevent mineral plunder in Coimbatore
various organizations protest to urging prevent mineral plunder in Coimbatore

By

Published : Mar 9, 2021, 4:47 PM IST

கோவை: கோவை தடாகம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அனுமதியின்றி செயல்பட்டுவருவதாகவும், அவை அப்பகுதியிலுள்ள கனிமவளங்களை சுரண்டிவருவதாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவருகின்றனர். கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பினர் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர்களிடம் மனுக்களையும் அளித்து வருகின்றனர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கனிமவளக் கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், தடாகம் பள்ளத்தாக்கு கனிம வள பாதுகாப்பு, சமூகநீதி பஞ்சமி நில மீட்பு இயக்கம், கௌசிகா நதி உழவர் குழு, கோவை மாவட்ட இளைஞர் சங்க மாவட்ட சங்கம் போன்ற அமைப்புகள் இணைந்து இன்று(மார்ச் 9) கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது, கனிமவளக் கொள்ளையைத் தடுக்க வேண்டும், அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கனிமவள கொள்ளையை தடுக்காமல் இருக்கும் அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி, "கோவை தடாகம் பகுதியில் செயல்படும் செங்கல் சூளைகளினால் தடாகம் பள்ளத்தாக்குப் பகுதி பாலைவனமாக மாறி வருகிறது. இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை அலுவலர்களும் துணைபோகின்றனர். இதனால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், யானைகள் ஊர் பகுதிக்குள் வரும்நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய சமூக நீதிக் கட்சியின் தலைவர் செல்வம் பன்னீர்செல்வம், "இங்குள்ள அரசு அலுவலர்கள், உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்த கனிம வளக் கொள்ளைக்கு முதல் காரணம் வடக்கு வட்டாட்சியர் மகேஷ்குமார். இங்குள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் போன்றோர் செங்கல் சூளைகளிடம் பணம் பெற்றுக் கொண்டு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுக்கின்றனர். கனிம வளக்கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களைப் பிடித்தால், அதில் ஒரு வாகனத்தை மட்டும் கணக்கில் காட்டுகின்றனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய தடாகம் பள்ளதாக்கு கனிமவள மீட்புக் குழு உறுப்பினர் கணேஷ்குமார் "செங்கல் சூளை அதிபர்கள் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, அரசு உடனடியாக இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:அனுமதி இல்லாமல் இயங்கும் செங்கல் சூளைகள் - டன் கணக்கில் செம்மண் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details