கோயம்புத்தூர்: சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் முன்பு, நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரை நவம்பர் 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாளை சென்னை வருகை தர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
பெட்ரோல் வீசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல் துறையே தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம், மேலும் நான்கு பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; கருக்கா வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்!
கோவையில் குண்டு வைத்து அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளை, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய திமுக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம் ஒழுங்கி சீர்குலைந்துள்ளது.
இந்தச் சூழலில், கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்தால், அதனால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. பயங்கரவாதிகளை பயங்கரவாதிகளாகவே பார்க்க வேண்டும். அவர்களை விடுவித்தால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என அரசியல் லாபக் கணக்கு பார்க்கக் கூடாது.
திமுக அரசின் செயல்பாடுகளை, அதன் இந்து விரோதப் போக்கை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால், பகிர்ந்தால் கூட வார இறுதி நாட்களில் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யவே தமிழ்நாடு காவல்துறைக்கு நேரம் போதவில்லை. ஆளுநர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீசத் துணிகிறார் என்றால், அது ஒரு தனிநபரின் முயற்சியாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு காவல்துறை தி.மு.கவினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐபிசி 124 என்றால் என்ன? - ஆளுநர் மாளிகை மேற்கோள் காட்டியதற்கான காரணம் என்ன?