கோயம்புத்தூர்:கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துளிர் திட்டத்தின் கீழ் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்குப் பேரீச்சம் பழம் மற்றும் நீர் பானம் ஆகிய சத்துணவுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு மாணவிகளுக்குச் சத்துணவுகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகை பரிசோதனை நடத்தி வருகிறோம். இளம் வயதில் பெண்கள் அதிகளவில் ரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். ரத்தசோகையிலிருந்து பெண்களை மீட்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு.
1500 மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 240 பேருக்கு ரத்தசோகை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இரும்புச் சத்து மாத்திரைகளைக் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. அதனால் தான் குழந்தைகளுக்குப் பேரீச்சம்பழம், நீர் பானம் கொடுத்துள்ளோம். கோவை தெற்கு தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதனைச் செயல்படுத்துகிறோம்.
மழை நீர் செல்ல வடிகால் அமைக்க வேண்டும்:மழைக்காலங்களில் கோவை ராமநாதபுரம் பகுதியில் மழை நீரோடு, கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் செல்கிறது. இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவிக்க உள்ளேன். அப்பகுதியில் மழை நீர் செல்ல வடிகால் அமைக்கும் பணிகள் பருவமழைக்கு முன்பே முடித்திருக்க வேண்டும். தற்போது 63 சதவீதம் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இது போன்ற பருவமழை காலத்திற்கு முன்பே முடிக்க வேண்டிய பல வேலைகளை முடிப்பதில்லை. இதனைச் சரி செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமையால் தந்தை மரணம்: கணவருக்கெதிராக களமிறங்கிய பெண்
நீதிக்கான பயணத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளனர்:ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, அம்மக்கள் ஜனநாயக பாதைக்குத் திரும்ப உதவி செய்யும். சிறப்பு அந்தஸ்து இருந்ததால் வேலை வாய்ப்பு, கட்டமைப்பு வசதிகள் உருவாக்க முடியாத நிலை இருந்தது. பெண்கள் வேறு மாநில இளைஞர்களைத் திருமணம் செய்தால் சொத்துகளை இழக்க வேண்டியிருந்தது. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் விரைவில் நடப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். அம்மக்களின் நீதிக்கான பயணத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்கள்.