தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக மக்கள் அயோத்தி செல்ல அறநிலையத்துறை உதவ வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்! - ராமர் கோவில் கும்பாபிஷேகம்

Vanathi Srinivasan: ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் இருந்து அயோத்திக்கு 1 லட்சம் பேர் செல்ல இந்து சமய அறநிலையத் துறை உதவி செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Vanathi Srinivasan
வானதி சீனிவாசன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 7:48 AM IST

Updated : Jan 13, 2024, 9:05 AM IST

வானதி சீனிவாசன் பேட்டி

கோயம்புத்தூர்: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து, டாடாபாத் பகுதியில் புதிய பூங்கா அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை கொட்டிய இடத்தை பூங்காவாக மாற்ற பூமி பூஜை போட்டுள்ளோம். மாநகரப் பகுதிகளில் அதிக பூங்கா உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து இயங்கி வருகிறோம். இந்த பூங்காக்கள் மக்கள் உடற்பயிற்சி, விளையாட உதவிகரமாக இருக்கும்.

கோவை பாஜகவினர் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான அழைப்பிதழ் மற்றும் அக்கோயிலில் பூஜிக்கப்பட்ட அட்சதையை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். அந்த அட்சதையை மக்கள் ஆர்வமாகவும், பயபக்தியுடன் வாங்கிக் கொள்கின்றனர். ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை பெரிய திரையில் திரையிடவும், பஜனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மக்களிடம் பெரும் மாற்றத்தைப் பார்க்கிறோம். கலாச்சார அடையாளமான ராமர் பிறந்த இடத்தில், சட்டப் பூர்வமாக நியாயமான கோயில் கட்டப்பட்டுள்ளது. இது கோடிக்கணக்கான மக்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. அயோத்தி செல்ல விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் செல்ல, மத்திய அரசு தகுந்த நேரத்தில் அறிவிப்பு வெளியிடும். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்து உள்ளது.

ராமர் கோயில் கட்ட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருந்தும், அவர்களது சுய லாபத்திற்காக தள்ளி போட்டார்கள். இது பாஜக, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் என காங்கிரஸ் சொல்கிறது. ஆனால், ராமர் கோயிலை பாஜக, ஆர்எஸ்எஸ் கட்டவில்லை. இது ராமரை வணங்கும் அத்தனை பேருக்கும் பொதுவான கோயில். இந்த கும்பாபிஷேகத்தை காங்கிரஸ் புறக்கணித்திருப்பது கண்டனத்திற்குரியது.

மக்களின் மத உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியின் அறிக்கை, மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இதற்காக அக்கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் சில சமய தலைவர்கள் மாற்றுக் கருத்து சொல்வது இயல்பானது. சமயத் தலைவர்கள் சொல்வதற்கும், இரு கட்சி சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. ராமர் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அரைகுறையாக முடிக்கவில்லை.

கோயிலைச் சுற்றி உள்ள பகுதி கட்டுமானங்கள் 2 ஆண்டுகளில் முடிவடையும். ராகுல்காந்தி நடை பயணத்தால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அவருக்கு சிக்கல் இல்லாமல் இருந்தால் சரி. கோவையின் தொழில் வளர்ச்சி என்பது முக்கியமானது. சென்னைக்கு அடுத்து கோவைதான் அதிக வருமானம் தருகிறது. தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பதில் தாமதம், கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் தாமதம், மெட்ரோ பணிகள் தாமதம் என கோவையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

இதை கேட்க பாஜக இருக்கிறது. இதனைக் கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். கோவையின் வளர்ச்சி புறக்கணிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் அயோத்திக்கு ஒரு லட்சம் பேர் செல்ல இந்து சமய அறநிலையத்துறை உதவி செய்ய வேண்டும். திராவிட மாடல் அரசு அனைத்து மக்களையும் சமமாக பார்க்க வேண்டும். பெரும்பான்மை மக்களைப் பிரித்து பார்க்கக் கூடாது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்க கூடாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக ஆளுநர் பரபரப்பாகச் செயல்படுகிறார் - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்!

Last Updated : Jan 13, 2024, 9:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details