கோயம்புத்தூர்:பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விற்பனை விலையாக கிலோவுக்கு ரூபாய் 33.44 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள், கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி டீ:சமீபத்தில் கோவை வந்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை, நேரில் சந்தித்த நீலகிரி நாக்குபெட்டா படுகர் நலச் சங்க பிரதிநிதிகள், இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து பசுந்தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த மத்திய அமைச்சர், இது குறித்து இந்திய தேயிலை வாரியத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகளின் இந்தப் பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
இதற்கு தீர்வு காணவே, கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், ‘ஊட்டி டீ’ என்ற பெயரில் ரேஷன் கடைகளில் டீ தூள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான டீ தூள் 100 சதவீதமும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெறப்பட்டன. இந்த திட்டத்தால் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகள் பெரும் பயனடைந்து வந்தனர்.
60% மட்டுமே நீலகிரி டீ தூள்:ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஊட்டி டீக்காக இருந்து 50 முதல் 60 சதவீதம் டீ தூளை மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்கிறது. 40 முதல் 50 சதவீதம் டீ தூள் அசாம் போன்ற பிற மாநிலங்களில் இருந்து பெறப்படுகின்றன. தொடக்கத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் கிலோ வரை விற்கப்பட்ட ஊட்டி டீ, தற்போது 2 லட்சம் கிலோ மட்டுமே விற்கப்படுகிறது.
ஊட்டி டீ தூள் விற்பனையை அதிகரிக்க வேண்டும்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் இதனை செயல்படுத்துவதில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. இதனால் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களின் நலன் கருதி, ரேஷன் கடைகளில், ஊட்டி டீ தூள் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100% டீ தூள் நீலகிரியில் பெற வேண்டும்: இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஊட்டி டீக்காக 100 சதவீத டீ தூளையும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெற வேண்டும். அதற்காக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளிடம் பசுந்தேயிலையை நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கோவையை கூல் கோவையாக மாற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்.. "ஜிப் லைன்", "ஜிப் சைக்கிள்" ரைடு என குதூகலிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள்!