கோயம்புத்தூர்:வடகோவை பகுதியில் கல்விக்கண் திறந்த (K Kamaraj Birthday) காமராஜரின் பிறந்த நாளான இன்று (ஜூலை 15) அவரது சிலைக்கு பாஜக சார்பில் வானதி சீனிவாசன் எம்எம்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்றப்பின் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், 'பிரதமர் மோடி அறிவித்த தேர்தல் வாக்குறுதி தொடர்பாக உதயநிதி தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு பதில் அளித்தார்.
தமிழ்நாடு அரசு நல்ல கல்வியை தருக:காமராஜரின் ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஆட்சி என்றும் காமராஜரின் செயலை பாஜக நினைவுக்கூறுகிறது என்றும் காங்கிரஸின் எமர்ஜென்சியால் (The Emergency in India 1975) காமராஜர் மனவேதனைப்பட்டு இறந்தார் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது, தமிழகத்தில் கல்வி வியாபாரமாக மாறியுள்ளதாகவும் இதனால், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பெற்றோர்கள் தங்கள் வருமானத்தின் பெரும் பங்கை செலவு செய்வதாகவும் குற்றம்சாட்டினார். இதுவே, கல்வி சுமையாக குடும்பங்களில் மாறுவதாகவும், ஆகவே தமிழ்நாடு அரசு நல்ல கல்வியை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விஜய் தொடங்கிய இரவு பாடசாலை; வரவேற்கிறோம்:மோடி குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மோடி என்ன பேசினார் என்று முழுமையாக கேட்க வேண்டும் என்றார். மோடி பேசியதை இந்தி தெரிந்த பண்டிட்களிடம் அவர் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய வானதி சீனிவாசன், தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் ரூ.1000 எனப் பேசிவிட்டு மாற்றி பேசுவதாகவும் குற்றம் சுமத்தினார். விஜய் கல்விக்காக இரவு பாடசாலை (Actor Vijay Night School Scheme) துவங்கியதை வரவேற்பதாகவும், இது எவ்வாறு செயல்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் சமூகத்திற்காக பங்களிப்போருக்கு பாராட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார்.