கோவை:செட்டி வீதி பகுதியில் பாலாஜி அவென்யூவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் இன்று (டிச.19) திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'இளைஞர்களுக்கு உடற்பயிற்சிக்கு கருவிகள் அமைத்து அரசின் சார்பில் பராமரிப்பது குறைவாக உள்ளது. கோவை மாநகர் முழுவதும் சாலைகள் மோசமாகி விட்டன.
மோசமான சாலைகள்:அதிகமாக மக்கள் பயன்படுத்தும் சலிவன் வீதி, செட்டி வீதிகள் கூட மோசமாக உள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்பு போட்ட தண்ணீர் பந்தல் சாலைகள் மோசமாக உள்ளதப. மழைக்குப் பின்பு அந்த சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. சாலைகளை சரி செய்ய வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு உள்ளாக பாஜக சார்பில் போராட்டம் அறிவிக்கப்படும்.
தொழிலாளர்கள் வயிற்றில் அடிப்பதா?: குடிநீர் பிரச்னைகள், சாக்கடை, சாலை எனப் பல பிரச்னைகள் உள்ளது. அரசாங்கம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர். அடுத்த வாரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகு பார்க்கிறார்.
'வாரிசு அரசியல்'-திமுகவில் பிறருக்கு வாய்ப்பில்லை:தன்னுடைய மகனை அமைச்சராக்கியதன் வாயிலாக குடும்பத்தின் கட்சியாக திமுக மாறியுள்ளது. ஜனநாயக அமைப்புகளில் குடும்ப அரசியலுக்கு இடமே இல்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் கட்சியாக திமுக இல்லை. ஒரு காலத்தில் இளைஞர்களை ஈர்த்த கட்சி திமுக. தற்போது புதியவர்களுக்கும், திறமைசாலிகளுக்கும் திமுக வாய்ப்பு கொடுக்கவில்லை.