கோவை:பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2011 முதல் 2015 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி. அமைச்சராக இருக்கும்போது ஓட்டுநர், நடத்துநர் போன்ற பணி நியமனங்களில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக அப்போது தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம்சாட்டியது.
புகார்கள் எழுந்த நிலையில் அதிமுக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு பின் 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுடன் இணைந்தார். தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஊழல் முறைகேடுகள் மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே குற்றச்சாட்டுக்காக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மத்தியில் வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பாஜக அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக-வானது பழிவாங்கும் எண்ணத்தில் நடவடிக்கை எடுத்துள்ளது என பாஜக மீது வீண்பழிகள் போடுகின்றனர். ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், இது கடும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.