கோயம்புத்தூர்:பாஜக மகளிரணி சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ‘சுஷ்மா ஸ்வராஜ்’ என்ற பெயரில் விருது வழங்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் நியூ சித்தா புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்ற பெண்களுக்கு சுஷ்மா ஸ்வராஜ் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக எப்படி பெண்கள் பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக தடைகளைத் தாண்டி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து அடுத்து வரக்கூடிய பெண்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை வழங்கி வருகிறது. பிரதமரின் அரசு, பெண்கள் தலைமை ஏற்கின்ற முன்னேற்றம் என்ற அனைத்து அரசுத் திட்டங்களையும் பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி அமைத்து வருகிறது. 8 ஆண்டு காலத்திற்குள் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு, கழிப்பிடங்கள், பெண்கள் பெயரால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், முத்ரா திட்டத்தில் 65 சதவீதம் பெண் பயனாளிகள், சுயதொழில் முனைவோர் திட்டத்தில் 85 சதவீதம் பெண்கள் என இதுபோன்ற பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு எடுக்கின்ற திட்டங்களை இந்த விருது வழங்கும் நிகழ்வில் கூறி வருகிறோம்.
பெண்கள் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல், அவர்கள் அரசியலில் சிறந்த பங்கேற்பாளர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். பாஜகவில் இருந்து யாரேனும் விலகிச் சென்றால் அது தற்போது மிகப் பெரிய விவாதமாகி வருகிறது. கடந்த 2 வாரங்களில் 420 பேர் மாற்றுக் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்துள்ளனர். சாதாரண தொண்டன் கூட இந்த கட்சியில் இருந்து போகக்கூடாது என்று நாங்கள் நினைக்கின்றோம்.
ஜனநாயகத்தில், குறிப்பாக தேர்தலில் எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியமானது. எனவே ஒரு தொண்டன் இந்த கட்சியில் இருந்து செல்வது கூட, எதற்காக செல்கிறார்கள், அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதை நாங்கள் பார்க்க வேண்டும். சில நேரங்களில் அவர்களது தனிப்பட்ட அரசியல் ஆசை காரணமாகவும், அவர்களது தனிப்பட்ட கொள்கைகள் காரணமாகவும் செல்லும்போது எதுவும் செய்ய இயலாது. தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலம்.
குறிப்பாக இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கின்ற மாநிலம் எனக் கூறுகிறோம். உயர் கல்வி என்று கூறும்போது, 12ஆம் வகுப்பைத் தாண்டி அவர்கள் செல்வதுதான். ஆனால் பரீட்சையில் இத்தனை பேர் தேர்வு எழுதாமல் இருக்கிறார்கள் என்று கூறினால், அரசாங்கம் இதனை மிகத் தீவிரமாக யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டின் கல்வி என்பது நல்ல நிலையில் இருந்து கொண்டாலும் கூட, அரசுப் பள்ளிகளில் சேர்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆனால் அரசுப் பள்ளிகளில் அதிகமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த சம்பளம் வழங்கப்படுகிறது. இலவசமாக புத்தகங்கள், மதிய உணவு, மடிக்கணினி மற்றும் மிதிவண்டிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. இவற்றையெல்லாம் தாண்டியும் கூட அரசுப் பள்ளிகளில் ஏன் மாணவர்கள் சேர்வதில்லை? ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டு செல்வது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் நண்பர் சினிமாவில் நடிக்கலாம்.
அமைச்சராகவும் இருக்கலாம். எனவே அவர்களுடன் நேரமும் செலவிடலாம். அதேநேரம் பள்ளிக்கல்வித்துறையை கவனிக்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் தொடர் போராட்டம்தான் தங்கள் ரகசியம் என உதயநிதி ஸ்டாலின் கூறியது என்பது, இந்த ரகசியத்தையா இவ்வளவு நாள் வைத்திருந்தார்கள்? என கேட்கத் தோன்றுகிறது. மக்களை ஏமாற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமை வேறுபாடு என்பதே கிடையாது.
திமுக அளித்த வாக்குறுதிகளையும், அரசு பொறுப்பேற்றுவிட்டால் இவர்கள் செயல்படுத்துகின்ற செயல்களில் இருக்கின்ற வித்தியாசங்களை நாங்கள் எடுத்துக் காட்டுகின்றோம். திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் உதயநிதி, சொல்லும் வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கை ஐடி விங் குலைத்து விடும் என்று கூறினால், மாநிலத்தின் முதலமைச்சருக்கு அவர்களுடைய காவல் துறை மீது நம்பிக்கை இழந்துள்ளாரா?