கோயம்புத்தூர்:பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத்தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், இன்று (மார்ச் 7) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய வானதி சீனிவாசன், ''வடமாநிலத் தொழிலாளர்கள் சம்பந்தமான வீடியோ பிரச்னைகள் குறித்து, மாநில அரசோ அல்லது முதலமைச்சரோ எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்ததனால், வடமாநிலத்தில் பல்வேறு போலி செய்திகளுடன் சேர்ந்து ஒரு பெரிய பிரச்னையாக இங்கு உருமாறி உள்ளது.
வடமாநிலத்தவர்களுக்கு ஹோலி பண்டிகையும் முக்கியமான பண்டிகை. அதற்குச் செல்வோரும் சென்று வரும் நிலையில், அவர்களது வீடுகளில் இந்த வீடியோ குறித்தான கருத்துகள் சென்றதால் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. முதலமைச்சரின் அமைச்சரவையைச் சார்ந்தவர்களே பல்வேறு சமயங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் பற்றியும், அவர்கள் செய்கின்ற வேலைகள் பற்றியும் கேவலமாகவும், நியாயம் கற்பிக்கின்ற வகையிலும் நடந்து கொள்கிறார்கள்.
இதை அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டியது முதலமைச்சர் தான். முதலமைச்சர் இதனை முளையிலேயே கிள்ளி எரிந்திருந்தால், இது போன்ற சூழல் தற்போது வந்திருக்காது. வடமாநிலத் தொழிலாளர்கள், குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் நிலையில், இந்தப் பிரச்னையை மாநில அரசு சரியாக கையாளாததால் அங்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு இந்தப் பகுதிகளை பழி வாங்குகின்ற நோக்கத்தில் செயல்படுகிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் எந்த பிரச்னையினாலும் பாதிக்கப்படட்டும் என விட்டு விட்டார்களா என சந்தேகம் எழுகிறது. முதலமைச்சர் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுகின்ற வகையில் உணர்கிறார் என்றால், இந்த பிரச்னைக்கு மூலக் காரணம் யார்? இதற்கு முன் பத்து ஆண்டுகள் இது போன்று நடந்ததா?
இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு சமூக ஊடகங்களிலும், இவர்களது அமைச்சர்கள் வடமாநிலத் தொழிலாளர்களை குறிப்பிட்டு பானி பூரி, இந்தி பேசினால் வேலை கிடைக்குமா? எனத் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக சிலர் பல்வேறு கருத்துகளைப் பரப்பி, வடமாநிலத் தொழிலாளர்கள் வருவதால்தான் தமிழ் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என வெறுப்புணர்வு பிரசாரத்தை தூண்டுபவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு, பிரச்னை வந்த பிறகு தனது ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என முதலமைச்சர் கூறினால், இதனை உருவாக்கியது நீங்கள்தான்.
தங்களிடம் இருக்கின்ற தோல்விகளை மறைத்துவிட்டு, அடுத்தவர்கள் மீது பழி போடுகின்ற முயற்சியை முதலமைச்சர் செய்யக்கூடாது. முதலமைச்சர், இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக யார் பேசினாலும் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார். அதில் உறுதியாக இருக்க வேண்டும். வட மாநிலங்களில் இருந்து வருபவர்களும் இந்தியர்கள்தானே. இந்தியர்களைப் பற்றி உங்கள் மாநில அமைச்சர்கள் பேசுவதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என சொன்னால், எதற்கு இன்னொருவர் மீது பழி போடுகிறீர்கள்?