கோவை பாப்பம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கோவை பீளமேடு பகுதியில் யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் என்ற சிட்பண்ட் நிறுவனத்தை கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால்,மாதம் இரண்டு தவனையாக 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்கள் வழங்கப்படும் என்றும் 10 மாதங்களுக்கு பிறகு ஒரு லட்சம் ரூபாய்க்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தியுள்ளார்.
இதனை நம்பி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேர், ஒரு லட்ச ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். அதன்படி அந்த நிறுவனம் சுமார் 2,200 கோடி ரூபாயை முதலீடாகப் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 36 கிளைகள் கொண்ட இந்நிறுவனம், முதலீடு செய்தவர்களுக்கு ஆரம்பத்தில் பணம் செலுத்தி வந்துள்ளது. பின்னர் முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 350 பேர் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.