கோயம்புத்தூர்:கோவை ரத்தினபுரி பகுதியில் இன்று (ஜன.07) நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு தொழில்களுக்கான கடன் உதவி, சாலையோர வியாபாரிகளுக்கான பி.எம்.சுவநிதி திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
மேலும், தபால் துறையின் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கும், உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்ட பயனாளிகளுக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, திட்டப் பயன்கள் வழங்கப்பட்டன. இதனை மத்திய இணை அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து, வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் விமான நிலையம் உள்பட நாட்டின் விமான சேவைகள் விரிவாக்கப்பட்டு, தேசத்தின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.