கோயம்புத்தூர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஜி20 இளம் தூதுவர்கள் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன், இந்தியாவின் ஜி20 ஷெர்பா அமிதாப் காந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த மாநாட்டில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கான கூட்டுக்கல்வி முறை என்ற தலைப்பிலும், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் தொழில் முனைவு என்ற தலைப்பிலும் இளம் தூதுவர்கள் கலந்துரையாடினர். இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன், ''கோவையில் ஜி20 மாநாடு நடைபெறுவது நமக்குப் பெருமை. இந்த மாநாட்டில் உலகின் இளம் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கால நிலை, உணவு, சுகாதாரம், வறுமை, கல்வி மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கின்றனர். இந்தியாவில் இந்த சவால்களை பிரதமர் திறமையாக எதிர்கொண்டு வருகிறார். கரோனா பரவலால் உலகமே பாதிக்கப்பட்டிருந்த சூழலில், இந்தியா தடுப்பூசியைத் தயாரித்து நம் மக்களுக்கு வழங்கியதோடு, உலக நாடுகளுக்கும் வழங்கியுள்ளது.
இதேபோல், கரோனா காலத்தில் இ-வித்யா என்கிற திட்டம் மூலமாக நாடு முழுவதற்கும் இலவச கல்வி வழங்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கோவையில் தொடங்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றுவதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. தாய் மொழிக் கல்வியை ஆரம்ப கல்வியில் கொடுப்பதே புதிய கல்விக்கொள்கையின் தாரக மந்திரமாக உள்ளது. கோவையில் நடைபெறும் இந்த மாநாடு மூலமாக அனுபவங்கள் பகிர்வு செய்யப்பட்டு, இது உலக அளவில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும்'' என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “இந்த கல்லூரி மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு புதிய புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ் கலாசாரம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. குறிப்பாக, திருவள்ளுவரின் திருக்குறள் என்பது மக்களுக்கு, பல்வேறு கலாசாரங்களைக் கற்றுக் கொடுக்கிறது.