கோயம்புத்தூரில் என்.டி.சி. பஞ்சாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இது தவிர மகாராஷ்டிரா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காணொலி மூலம் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், என்.டி.சி. ஆலைகள் செயல்படும் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கி அதற்கு சேவ் என்.டி.சி. எனப் பெயரிடப்பட்டது.
இதன் ஒருங்கிணைப்பாளராக சி. பத்மநாபன், தலைவராக சச்சின் அகிர், உதவி தலைவராக கே.என். கோபிநாத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பி.ஆர். நடராஜன், எம். சண்முகம், இளமறம் கரீம், மராட்டியம், குஜராத், ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து ஒருங்கிணைப்புக் குழுவைச் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன் முதல்கட்டமாக ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்ற வாயிலில் போராட்டத்தில் ஈடுபடுவது, பிரதமர், துறை சார்ந்த அமைச்சர்களைச் சந்தித்து என்.டி.சி. ஆலைகளை இயக்கத் தேவையான அழுத்தத்தை ஏற்படுத்துவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.