கோயம்புத்தூர்:கோவையை அடுத்த பேரூரில் உள்ள சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ் கல்லூரியில் நிமிர்வு கலையகம் மற்றும் பேரூர் ஆதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து உலகப்பொது பறை மாநாடு நிகழ்வை நடத்துகின்றனர். இன்று (ஜூன் 18) ஒரு நாள் நடைபெறும் இந்த பறை மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட தொல்லிசை கருவிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், இந்த நிகழ்வில் பறை நூல்கள் வெளியீடு, 1330 திருக்குறள் பறைப்படை நிகழ்ச்சி, கருத்தரங்கு நிகழ்ச்சி, நாட்டார் கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில், இந்த மாநாட்டை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பறை இசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, தொல்லிசை கருவிகள் கண்காட்சியைப் பார்வையிட்ட அமைச்சர், பல்வேறு இசைக் கருவிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள சில கருவிகளையும் இசைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சாமிநாதன், “தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல்லாயிரம் ஆண்டுகளாக இசையை வளர்த்துள்ளார்கள்.
பறை போன்ற இசைக் கருவிகளைக் கொண்டுதான் மன்னர்களே பொதுமக்களுக்கு பறை அடித்து செய்திகளை வெளிப்படுத்தி உள்ளார்கள். அந்தக் காலத்தில் கோயில் நிகழ்ச்சிகளிலும், சுப நிகழ்ச்சிகளிலும் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற நமது கலாச்சாரம், கலைப் பண்பாடுகளை மீட்டெடுக்க வேண்டியதுதான் நம்முடைய தலையாய கடமையாக உள்ளது.