கோயம்புத்தூர்: காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல், மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இதில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 524 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் 500 மகளிருக்கு தையல் இயந்திரமும் வழங்கினார்.
அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "கடந்த முறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கூட்டத்தில், நான் பேசியபோது கோவை மக்கள் குசும்பு காரர்கள் ஏமாற்றி விடுவார்கள் எனக் கூறினேன். ஆனால், தற்பொழுது திமுகவிற்கு கோவையில் அமோக வெற்றி கிடைத்ததால் அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறச் செய்தால் அடிக்கடி கோவைக்கு வருகை தருவேன் என கூறினேன். அதே போல் தான் தற்பொழுது வந்துள்ளேன். இந்த வெற்றியைப் பெற பாடுபட்ட அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்த வெற்றியை பெற்று தந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது முதலமைச்சரின் 8 மாத கால ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.