தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை வனப்பகுதியில் 2 யானைகள் உயிரிழப்பு - என்ன காரணம்? - elephant death in coimbatore

கோவை வன கோட்டத்தில் ஒரே நாளில் இரண்டு யானைகள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது சூழலியல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 9:16 PM IST

கோவை: துடியலூர் ராக்கிபாளையம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில், ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, உடல் சிதைந்த நிலையில் ஆண் யானை இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை ஆய்வு செய்தபோது, அதற்கு 13 வயது இருக்கலாம் என்றும், அது இறந்து 2 தினங்குகளுக்கு மேல் இருக்கும் என்றும், இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், வாயில் பலத்த காயமடைந்த இந்த யானை உணவு, தண்ணீர் அருந்த முடியாமல், உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து இருக்கலாம் என்று தெரியவந்தது. பிரேத பரிசோதனை முடிவில் யானை இறந்ததற்கான முழுகாரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், அவுட்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை கடித்ததால் யானைக்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சின்னத்தடாகம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியின் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் அங்கு ஆடு, மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சற்று தொலைவில் ஒரு யானைக்கூட்டம் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்து ஒரு யானை திடீரென கீழே விழுந்து துடித்தது. இதைப்பார்த்த அவர்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அருகில் இருந்த வனத்துறையினர் உடனே அங்கு சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே அவர்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை உயரதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் அங்கு சென்று யானையின் உடலை ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதில் யானையின் இருதயம், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உடற்பாகங்கள் நன்றாக இருந்த நிலையில், யானையின் உயிரிழப்பிற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து, யானையின் உடல் பாகங்கள் பரிசோதனைக்காக வெட்டி எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதன் முடிவிலேயே யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 24 மணி நேரத்தில் இரண்டு யானைகள் கோவை வனக்கோட்டத்தில் உயிரிழந்த சம்பவம் சூழலியல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, தற்போது யானைகளின் வலசை காலம் என்பதால் கேரள மாநில வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக ஏராளமான யானைகள் கூட்டம் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்கள்:கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோயில் திருவிழா.... பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details