கோவை: பீளமேடு ஹட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர், ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா (வயது 38). இவர் தனது கணவருடன் நாள்தோறும் காலை நேரத்தில் அந்தப் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் பணி காரணமாக ராஜ்குமார் நேற்று முன் தினம் காலை நடைபயிற்சிக்கு வராததால், கவுசல்யா மட்டும் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அவர் ஜி.வி. ரெசிடென்சியில் உள்ள பேக்கரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வெள்ளை நிற காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பின்தொடந்து வந்து உள்ளனர். அப்போது காரினுள் இருந்த ஒருவர் காரின் முன் பக்க ஜன்னலைத் திறந்து, அதன் வழியாக கையை வெளியே நீட்டி தனியாக நடந்து சென்று கொண்டிருந்த கவுசல்யா கழுத்தில் இருந்த நகையைப் பறிக்க முயன்று உள்ளார்.
கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் கவுசல்யா அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் தனது இரு கைகளாலும் நகையை இறுக்க பற்றிக் கொண்டார். மேலும் அவர் ”திருடன் திருடன்” என்று கூச்சலிட்டு உள்ளார். அந்த நபர் நகையைப் பறிக்க முயன்ற போது கவுசல்யா நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதை அடுத்து காரில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா, இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அவர் அளித்தப் புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடைய நகைப் பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் கவுசல்யா நடைப்பயிற்சி செய்தபோது, பின்னால் வாகனப் பதிவெண் இல்லாத காரில் வரும் அடையாளம் தெரியாத நபர்கள் செயினை பறிக்கும்போது காரின் கீழ் கவுசல்யா விழும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்த சம்வத்தைத் தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் இன்று இரண்டு பேரை கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் நகை பறிக்க முயன்ற அபிஷேக் குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.