கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கோமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக காவல் துறைக்கு புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் ரா.அருளரசு உத்தரவின்பேரில் கோமங்கலம் காவல் துறையினர் திருட்டு மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கினர். திருட்டு தொடர்பான பல்வேறு கட்ட விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே செட்டிபாளையம் சாலையில் வசிக்கும் மூதாட்டி ஈஸ்வரியிடம், அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், லிங்க பூபதி ஆகியோர் மூன்று சவரன் நகையை திருடியுள்ளனர். பின்னர், ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில், இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், செந்தில் குமார் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து திருடப்பட்ட மூன்று சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், பின்னர் சிறையில் அடைத்தனர்.