தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரையாடுகளை துன்புறுத்தி போட்டோ; கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு கோவையில் சிறை - கேரளாவை சேர்ந்த இருவருக்கு கோவையில் சிறை

பொள்ளாச்சி அருகே வரையாடுகளை (Nilgiri tahr) துன்புறுத்தி புகைப்படம் எடுத்த கேரளாவைச் சேர்ந்த இருவரை வனத்துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 13, 2023, 7:16 PM IST

கோவை:ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியிலுள்ள வால்பாறை சாலையில் வரையாடுகளை (Nilgiri tahr) துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த இருவரை வனத்துறையினர் கைது செய்து பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (ஜன.13) சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு மலைப்பகுதியில் சாலை ஓரங்களில் காட்டு யானைகள், கரடிகள்,வரையாடுகள் என வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம்.

இந்தியாவில் இருந்து அதிக அளவில் வால்பாறைக்கு வரக்கூடிய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா சுற்றுலாப் பயணிகள், வால்பாறை மலைப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.13) ஆறாவது கொண்டை ஊசி வளைவில் அங்கு சாலை ஓரங்களில் நின்று கொண்டிருந்த வரையாடுகளை கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் துன்புறுத்தி புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் இதனை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட 2 கேரள மாநிலத்தவர்கள்

சமூக வலைதளங்களில் இதனைக்கண்ட வனத்துறையினர், வனத்துறை ஆழியார் சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் ஆய்வு செய்தபோது, அதில் பதிவாகியிருந்த கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பதிவு எண்ணைக் கொண்ட வாகனத்தைக் கண்டறிந்தனர். பின்னர், அந்த வீடியோவில் இருந்த செல்டன், ஜோபி ஆபிரகாம் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர் இன்று அவர்களை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம் கள துணை இயக்குநர் பார்க்கவ தேவ் கூறுகையில், 'வரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் மாநில விலங்கான வரையாடுகளை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு அபராதமும் விதிக்கப்படும்' என எச்சரித்தார்.

இதையும் படிங்க: செல்லாத நோட்டுகளை மாற்றித்தரக் கூறிய சிறுவனை தாக்கிய கடைக்காரரால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details