தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளத்துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது

கோயம்புத்தூர் வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கிகளுடன் சொகுசு காரில் சுற்றித்திரிந்த இருவரை கைது செய்த வனத்துறையினர், தப்பியோடிய மூவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கள்ளத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது
கள்ளத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது

By

Published : Feb 28, 2022, 10:47 PM IST

கோயம்புத்தூர்:மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியோரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு சொகுசு கார் சுற்றி வந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் காரை நிறுத்தி விசாரிக்க முயன்றனர். ஆனால், காரில் இருந்தவர்கள் வேகமாக ஓட்டிச் சென்று தப்பிக்க முயன்றனர். இருந்தபோதிலும், அவர்களை வாகனத்தில் பின் தொடர்ந்த வனத்துறையினர் காரை விடாமல் விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர்.

அப்போது காரில் இருந்த 5 பேரில் மூன்று பேர் காரில் இருந்து வேகமாக இறங்கி தப்பியோடினர். இருவர் மட்டும் வனத்துறையினரிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், மணி என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

தொடர்ந்து காரை சோதனையிட்டபோது அதில் இரண்டு கள்ளத்துப்பாக்கிகள், அதற்கு பயன்படுத்தப்படும் மூன்று தோட்டாக்கள் இருந்தன. மேலும் அவர்கள் பயன்படுத்திய காரில் போலி நம்பர் பிளேட் பொருத்தியிருந்ததும் தெரியவந்தது.

வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாட சேலத்தில் இருந்து வந்ததாக இருவரும் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2 கள்ளத்துப்பாக்கிகள், தோட்டாக்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்

தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த அலுவலர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய மூவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்டது கள்ளத்துப்பாக்கி என்பதால் உண்மையில் வேட்டைக்கு வந்தவர்களா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்துடன் வந்துள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:கமிஷன் கொடுப்பதில் தகராறு... பெண்ணை கொல்ல முயற்சி... பக்கத்து வீட்டுக்காரர் கைது

ABOUT THE AUTHOR

...view details