கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூரில் இறந்த பெண் யானையின் கோரைப் பற்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில், அப்பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் வைத்து கோரைப் பற்களை விற்பனை செய்ய இருந்த இருவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சேத்துமடை மணியன், ஒடையகுளம் மோகன்ராஜ் என்பதும் போத்தமடை வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் மண்டையோட்டிலிருந்து கோரைப் பற்களை எடுத்து விற்க முயன்றதும், இதற்கு முன்பு சந்தன கட்டை கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.