கோவையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க சிங்காநல்லூர் இ. எஸ். ஐ அரசு மருத்துவமனையானது பிரத்தியேக மருத்துவமனையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலில் 360 படுக்கைகளுடன் வைரஸ் தொற்றுக்கு இ.எஸ். ஐ அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நோய்த்தொற்று அதிகரிப்பு காரணமாக 500 படுக்கைகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாதவர்ளுக்கு சிகிச்சை அளிக்க கோவை கொடிசியா வளாகத்தில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்ட இரண்டாவது சிகிச்சை மையம் இன்று (ஜுலை 7) முதல் செயல்பாட்டிற்கு வந்தது.
தற்போது 359 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நேற்று நள்ளிரவில் அறிகுறிகள் இல்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்ட 18 பேர் கொடிசியா வளாகத்தில் உள்ள சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டனர்.