கோயம்புத்தூர்:போத்தனூர் முதல் கேரள மாநிலம் பாலக்காடு வரையிலான ரயில் வழித்தடத்தில், மதுக்கரை வாளையாறு வரை உள்ள ரயில் பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்கிறது. கோவையில் இருந்து செல்லும் பாதை ஏ லைன் எனவும், கேரளாவில் இருந்து வரும் பாதை பி லைன் எனவும் அழைக்கப்படுகிறது.
இதில் வனப்பகுதி வழியாக ரயில்கள் செல்லும்போது, 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவு நேரங்களில் குறிப்பிட்ட வேகத்தை விட அதி வேகமாக ரயில்கள் இயக்கப்படுவதால், தண்டவாளத்தை கடக்கும் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்கிறது.
இவ்வாறு ரயில் மோதியதில், கடந்த 20 ஆண்டுகளில் 26 யானைகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையான வாளையாறு பகுதியில் இரண்டு பெண் யானைகள் சமீபத்தில் ரயில் மோதி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கரை பகுதியில் ரயில் மோதியதில் கருவுற்ற பெண் யானை உள்பட 3 யானைகள் உயிரிழந்த நிலையில், பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் ரயில் பாதையில் யானையில் அதிகம் கடக்கும் பகுதிகளை கண்டறிந்து சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுக்கரை வனச்சரகம் எட்டிமடை பகுதியில் இரண்டு இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து வன சூழ்நிலையியல் ஆர்வலர்கள் கூறுகையில், “பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும், நிரந்தரமானது அல்ல.
இந்த பகுதியில் இரவு நேரத்தில் ரயில்கள் இயக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் அல்லது உயர் மட்ட பாலம் கட்டினால் மட்டுமே யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க முடியும்” என தெரிவித்தனர். மேலும் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்ல உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதுரை கோயில் யானை மருத்துவத்திற்கு இவ்வளவு செலவா? ; ஆர்டிஐ தகவல்