கோயம்புத்தூர்: கரோனா தொற்று பாதிப்பில் கோயம்புத்தூர் மாவட்டம், தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்புக் குறைந்து வருகிறது.
கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் தடுப்பூசிப் போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தடுப்பூசிக்காக காத்திருக்கும் மக்கள்
ஊரடங்கில் தளர்வுகள் வந்துவிட்ட நிலையில், பணிக்குச் செல்வோர் பலரும் தடுப்பூசி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இதனால், முந்தைய நாள் இரவில் இருந்தே மக்கள் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்குகின்றனர்.
சரியான திட்டமிடலோ, அறிவிப்போ இல்லாததால் விடிய விடிய தடுப்பூசி மையத்தில் வரிசையில் நின்றும் தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
ஓடி ஒளியும் பழங்குடிகள்
இதனிடையே, தொண்டாமுத்தூரை அடுத்துள்ள முள்ளாங்காடு, தானிக்கண்டி உள்ளிட்ட மலை வாழ் கிராமங்களுக்கு, மருத்துவக் குழுவினர் தடுப்பூசி செலுத்தச் சென்றனர். மொத்தம் 500 டோஸ்கள் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவக் குழுவினரைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் ஓட்டம்பிடித்தனர்.
சிலர் வனப்பகுதிக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் ஓடி ஒளிந்து கொண்டனர். இளைஞர்கள் அருகில் இருந்த மரங்களில் ஏறி அமர்ந்துகொண்டு கீழே இறங்க மறுத்துவிட்டனர்.
அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில், கிராமங்களில் இருந்த வயதானவர்கள் தடுப்பூசி போட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவக் குழுவைக் கண்டு ஓடி ஒளியும் மலை கிராம மக்கள் உரிய நடவடிக்கை
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ள அந்த கிராமங்களில், நேற்று முன்தினம் (ஜூன்.2) 64 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
நவீனமயமாக்கலில் சிக்கிக் கொள்ளாத பழங்குடிகளுக்கு கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசி பீதி: மலை கிராம மக்கள் அச்சத்தால் மருத்துவக் குழுவினர் அதிருப்தி