வனப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்கினாலும் அவர்களின் வாழ்வாதாரம் என்பது தற்போது கேள்விக்குறியாகி வருகிறது. அடர் வனத்தில் வசிக்கும் இவர்களுக்கு அரசு பல ஏக்கர் நிலம் வழங்கி அதில் வேளாண்மை செய்துகொள்ள அனுமதித்துள்ளது.
ஆனால் அவர்கள் தற்போது நாடோடிகள்போல வாழ்ந்துவருகின்றனர். இதற்கு காரணம் அவர்களிடமிருந்த நிலம் அபகரிக்கப்பட்டு கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பழங்குடியின மக்களின் நிலத்திற்கு பாதுகாப்புக்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அந்த கமிட்டி இல்லாததால் பழங்குடியின மக்களின் நிலத்தை தொடர்ச்சியாக அபகரித்துவருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுக்கரை சாடிவயல், முட்டத்து வயல், ஆனைகட்டி, மாங்கரை, காரமடை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியினருக்கு பல ஆயிரம் ஏக்கர் அளவில் வேளாண்மை நிலம் இருந்த நிலையில், தற்போது ஒரு சிலருக்கு மட்டுமே இந்த நிலம் அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. மீதம் உள்ள இடங்கள் தொழிலதிபர்களாலும், அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு பழங்குடியின மக்கள் கூலி வேலைக்குச் சென்றுவருகின்றனர்.
இது குறித்து அலுவலர்களுக்குப் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் இருளர் சங்கத்தின் தலைவர் மல்லன் கூறுகையில், "மலைவாழ் மக்களின் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி போலி பத்திரம் தயாரித்து ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள இடங்களில் செம்மண் திருடப்பட்டு செங்கல் சூளைக்கு விற்கப்பட்டுவருகிறது.
இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் செங்கல் சூளையில் எரிக்கப்படும் கழிவுகளால் காற்று மாசுபாடு அடைந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல் சூளைக்கு பல அடி ஆழத்திற்கு செம்மண் வெட்டி எடுக்கப்படுவதால் யானை வழித்தடங்கள் மறிக்கப்பட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் மனித, மிருக மோதல்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் காரணமாக உயிரிழப்பு அதிகரித்துவருகிறது. பறிபோன தங்களுடைய நிலத்தை மீட்டுத்தர வேண்டும், கேரளாவில் பழங்குடியின மக்களின் நிலத்தை வாங்கினால் பத்திரம் செய்ய முடியாது என்ற நிலை உள்ளது. அதே நிலை தமிழ்நாட்டிலும் வர வேண்டும்.
பழங்குடியினருக்கு உள்ள நிலத்தைக் கண்டறிந்து மீண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், மூவாயிரம் ஏக்கருக்கு மேல் பழங்குடியினருக்குச் சொந்தமாக இருந்த நிலையில் தற்போது அதில் கால்வாசி மட்டுமே உள்ளது. மீதி எல்லாம் ஆக்கிரமிப்பில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
நிலம் பறிபோனது குறித்து தென்னிந்திய பழங்குடியின மக்கள் சங்கத்தின் தலைவர் முருகவேல் பேசுகையில், "கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது பஞ்சாயத்துகளிலும் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் 18 பஞ்சாயத்துகளிலும் உள்ள பழங்குடியினர் நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளது. இதனை அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் அபகரித்துள்ளனர்.
பழங்குடியினர் நிலத்தை திருப்பித் தர வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவை பின்பற்றப்படாமல் பழங்குடியின நிலம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுவருகிறது. பழங்குடியின மக்களின் நிலத்தை வாங்கவும், விற்கவும் கூடாது எனச் சட்டத்தில் உள்ளது. அப்படி இருக்கையில் எவ்வாறு இவர்கள் அபகரித்து உள்ளார்கள் என்பது குறித்து தெரியவில்லை.