கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் கோவை கோட்டம், கோவையை தலைமையிடமாக கொண்டு சேரன் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வந்தது. இதற்கு சொந்தமான 47 பழைய பேருந்துகளை ஏலம் விட்டதில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து 28 லட்சத்து 20 ஆயிரத்து 94 ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக 9.11.1988 ஆம் ஆண்டு சேரன் போக்குவரத்துக்கழகத்தின் பொதுமேலாளர் ரங்கசாமி கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார்.
இந்த புகாரை விசாரித்த போலீசார் சேரன் போக்குவரத்துக்கழகத்தில் உதவியாளராக இருந்த கோதண்டபாணி(82), துணைமேலாளர் ராமச்சந்திரன், நாகராஜன், நடராஜன், முருகனாதன், துரைசாமி, ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையின் போதே ராமச்சந்திரன், நடராஜன், ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மீதமிருந்த 4 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி கோதண்டபாணி, நாகராஜன், முருகனாதன், துரைசாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். தற்போது நீதிபதி சிவக்குமார் அளித்த தீர்ப்பில் கோதண்டபாணி தவிர மற்ற 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.