கோயம்புத்தூர்:ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான “மார்க் ஆண்டனி” படத்தில் திருநங்கை சமூக மக்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கோவையை சேர்ந்த திருநங்கை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் டைம் டிராவல் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஆக்ஷன் கலந்த படமாகும். இப்படத்தில் கதாநாயகனுக்கு கடந்த காலத்துடன் பேசும் ஃபோன் ஒன்று கிடைக்கிறது.
அதன் மூலம் கடந்த காலத்துக்கு போன் செய்து, தங்கள் வாழ்வில் மாற்றங்கள் செய்வது போல கதைக்களம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருநங்கைகளை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் இப்படத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக கோவையை சேர்ந்த திருநங்கை ஜாஸ்மின் மதியழகன் என்பவர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.
இப்படிப்பட்ட காட்சிகள் திருநங்கைகளை கேளிக்கை பொருளாகவும், அவமானப்படுத்துவதாக இருப்பதாகவும், இது போன்ற திரைப்படங்களினால் தான் திருநங்கைகளின் முன்னேற்றம் 10 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் புகாரில் தெரிவித்து உள்ளார்.