கோயம்புத்தூர்: மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலையின் அருகே இரு தண்டவாளங்கள் உள்ளன. இதில் ஒன்று பயணிகள் ரயிலுக்கான தண்டவாளம், மற்றொன்று சரக்கு ரயிலுக்கான தண்டவாளம் ஆகும். இதில், சிமெண்ட் தொழிற்சாலைக்கு சரக்கு ஏற்றி வரும் தண்டவாளத்தை ஆலை நிர்வாகம் பராமரிக்க வேண்டும்.
இந்நிலையில் இன்று (மார்ச். 13) clinker (நிலக்கரி எரிந்தபின் இருக்கும் இறுகிய கரிய ஓடு) ஏற்றி வந்த சரக்கு ரயில், ஆலையின் வளாகத்திற்குள் வரும்போது தடம் புரண்டு, அருகில் இருந்த மயில்சாமி என்பவரின் தோப்பிற்குள் விழுந்தது. இதே போல் ஐந்து நாட்களுக்கு முன்பும் சரக்கு ரயில் அதே தண்டவாளத்தில் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.