கோயம்புத்தூர்:மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலில் கடந்த ஆறு ஆண்டுகளாக டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியவர் வள்ளி. இவர், ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளை தனது இனிமையான குரலால் பாடல்கள் பாடி மகிழ்விப்பார். மலை ரயிலை பொறுத்தவரை மேட்டுப்பாளையத்தில் இருந்து 7:10 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 10 மணியளவில் குன்னூர் ரயில் நிலையம் சென்றடையும். கல்லார் முதல் ரன்னிமேடு ரயில் நிலையம் வரை மலை ரயில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியாக 13 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
மூன்று மணி நேரம் பயணத்தின்போது சுற்றுலாப் பயணிகளுக்குப் பொழுதைப் போக்குவதற்காக மலை ரயிலில் டிக்கெட் பரிசோதகராக இருந்த வள்ளி தனது இனிமையான குரலில் சினிமா பாடல்களை பாடி சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பார். மலை ரயிலில் பயணிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வள்ளியின் பாடல்களுக்கு அடிமையானவர்கள். இவரது பாடல்களை ரசித்து கேட்டு செல்வது மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.