கோவை பார்க் வீதியில், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தீபாவளி பலகாரங்களை வாங்க இயலாத சூழல் உருவாகி உள்ளதாகக் கூறி, களிமண்ணால் செய்யப்பட்ட லட்டு, முறுக்கு போன்றவற்றையும், காகிதங்களில் இனிப்பு பலகாரங்களை வரைந்து வைத்தும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பிரதமருக்கு களிமண் பலகாரங்கள் அனுப்ப முடிவு - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் - பிரதமருக்கு களிமண் பலகாரங்கள்
கோவை: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, களிமண்ணால் செய்யப்பட்ட பலகாரங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா கூறுகையில், "பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கூட கொண்டாட முடியாத சூழல் தற்போது உருவாகி உள்ளது. மத்திய அரசின் கொள்கைகளால் விலைவாசி விண்ணை முட்டும் அளவில் இருக்கிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் எண்ணெய், கடலை மாவு போன்ற அத்தியாவசிய பொருட்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும். இல்லையென்றால் இந்த தீபாவளி பொது மக்களுக்கும், பெண்களுக்கும் இனிப்பில்லாத பண்டிகையாக இருக்கும். இந்த கோரிக்கையினை வலியுறுத்தும் வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட பலகாரங்களை பிரதமர் மோடிக்கு அனுப்ப இருக்கிறோம். இதனை பார்க்க மட்டும்தான் முடியுமே தவிர சுவைக்க முடியாது. எனவே விலைவாசியை உடனடியாக குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.