கோவை பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்துமணி, நேற்று முன் தினம் கோட்டூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே லாரியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அவர் திரும்பிவந்து பார்க்கும்போது லாரியில் இருந்து பேட்டரி திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து ஆழியார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுகேஸ்வரன், ஆதான் இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் இதுபோல பல இடங்களில் பேட்டரிகளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் திருடி விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 15 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்களுடன் தொடர்புடைய சஜித், சதீஷ்குமார், விக்னேஷ், மதன்குமார் ஆகிய நான்கு பேரையும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்தும் 35-க்கும் மேற்பட்ட பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்களுடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா, இதேபோல் வேறு எங்கேயாவது பேட்டரிகளை பதுக்கி வைத்துள்ளனரா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பேட்டரி திருட்டு சம்பவம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுநர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாரியில் பேட்டரி திருட்டு