தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொங்கல் பரிசில் தேங்காயும் வழங்குங்கள்' - தமிழக பாஜக விவசாய அணி கோரிக்கை

தமிழ்நாடு அரசு வழங்கும் தைப்பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் என பாஜக விவசாயிகள் அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 3, 2023, 10:51 PM IST

கோவை: காந்திபுரத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் இன்று (ஜன.3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'வரும் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழகத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும், அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் பொதுமக்களுக்கு இலவசமாகத் தேங்காய் வழங்கி தென்னை விவசாயத்தைக் காப்பற்றக்கோரி தென்னங்கன்றுகளோடு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆர்ப்பாட்ட களத்திலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச தேங்காய் கொடுத்து அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட உள்ளது.

ரூ.108 லிருந்து ரூ.80 ஆக சரிவு:தமிழகத்தின் முக்கிய விளைபொருளும் உணவுப்பொருளுமான தேங்காய், கடந்த ஒரு வருடமாக தமிழக அரசின் முறையற்ற நிர்வாகத்தால் விலை மிகவும் குறைந்து கோடிக்கணக்கான தேங்காய்கள் தோப்பில் தேக்கமடைந்துள்ளன. மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான கொப்பரை தேங்காய்க்கு ரூ.108.65 தற்போது வழங்கப்பட்டும், அதிமுக ஆட்சிக்காலத்தில் கிலோ ரூ.110-க்கு விற்ற கொப்பரைத்தேங்காய் தற்போது திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.80-க்கு குறைந்தது. கடும் விலை சரிவால் விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, திமுக அரசின் அதிகாரிகளும், இடைத்தரகர்களுமே முக்கிய காரணியாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் 4.63 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தேசிய அளவில் தேங்காய் உற்பத்தியில் 31.5% பங்கு வகிக்கிறது.திமுக அரசின் மெத்தனத்தால் பல கோடி தேங்காய்கள் தேங்கியுள்ளன. எனவே தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொங்கல் பரிசில் கொப்பரை தேங்காய்?:பொங்கல் பரிசாக, தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்போடு (TN Govt Pongal Gift 2023) ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு தேங்காய் வீதம் 2 கோடியே 20 லட்சத்து 40 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தேங்காய்கள் வழங்கினால் அதன்மூலம் 4 கோடியே 40 லட்சத்து 80 ஆயிரம் தேங்காய்கள், தென்னை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். இதனால், விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்படும். எனவே, பொங்கல் தொகுப்போடு குடும்பத்திற்கு இரண்டு தேங்காய் வீதம் சேர்த்து வழங்க வேண்டும்.

மதிய சத்துணவோடு தேங்காய்:பள்ளிச் சிறுவர் சிறுமியர்களுக்கு மதிய சத்துணவோடு தேங்காய் சீவல் (அ) தேங்காய்ப்பாலை வழங்க வேண்டும். தேங்காயில் உள்ள தாய்ப்பாலுக்கு இணையான மோனோலாரி என்ற சத்து நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதோடு சிறந்த ஊட்டச்சத்தாகவும் விளங்குகிறது. ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாகத் தேங்காய் எண்ணெய்யை விநியோகம் செய்ய வேண்டும்.

பல்வேறு இடர்பாடுகளால் நஷ்டத்தில் இயங்கிவரும் தேங்காய் மட்டைத் தொழிற்சாலைகளைக் காப்பாற்றத் தமிழக அரசு தனிக்குழு அமைத்து, அவை மீண்டுவர ஆவண செய்ய வேண்டும். தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை சார்ந்த தொழிற்சாலைகள் மீது தமிழக அரசு காட்டும் கெடுபிடிகளைத் தளர்த்தி வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

இதையும் படிங்க:'வாய்ப்பில்ல ராஜா, கையில தான் காசு' - பொங்கல் பரிசுத்தொகை குறித்து அமைச்சர் பெரியகருப்பன்

ABOUT THE AUTHOR

...view details