கோயம்புத்தூர்:தமிழ்நாடு மின்சார வாரிய இன்ஜினியர் ஊழியர் சங்கத்தினர் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (பிப்.4) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பொதுச்செயலாளர் கோவிந்தராஜன் கூறுகையில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தை நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
எங்களின் பிரதான கோரிக்கை தமிழ்நாடு அரசு முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே. இந்த முத்தரப்பு ஒப்பந்தம் என்பது, கடந்த 2010ஆம் ஆண்டு அரசு ஆணை 100இன் கீழ் தமிழ்நாடு மின்வாரியம் பிரிக்கப்பட்டு, இரண்டு நிறுவனங்களாக மாற்றப்பட்டன. மின்வாரியத்தின் சொத்துக்களும் கடன்களும் அந்த நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில் பணியாளர்களுக்கு மட்டும் மாற்றத்திற்கான உத்தரவு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.
இதனால் பணியாளர்களுக்கு உறுதி அளிக்கின்ற வகையில், அவர்களது பணிஓய்வு காலப் பலன்கள், ஓய்வூதியம் போன்றவற்றை உறுதி செய்திட தமிழ்நாடு அரசு, மின் வாரியம், தொழிற்சங்கங்கள் மூன்றும் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தத்தினை ஏற்படுத்த வேண்டும். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மின்சாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்த போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மின்சார வாரியம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, மின்சாரச் சட்டம் 2003-ஐ அமல்படுத்திய பின்னர் மின்வாரியம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி தனியார் மின் உற்பத்தியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஆனால் கடந்த ஆண்டு வரை இவர்களால் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் அரசு மீண்டும் மின் வாரியத்தை தனியாருக்கு கொடுக்க நினைக்கிறது. இந்த நஷ்டத்தை ஈடு செய்கின்ற வகையில் மின் கட்டணத்தை உயர்த்த வாரியம் முடிவெடுத்துள்ளது. தேர்தல் காரணமாக மின் கட்டண உயர்வு அறிவிக்கப்படவில்லை.