கோயம்புத்தூர்:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி13) கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எல். முருகன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து அவினாசி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் எல். முருகன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சிறப்பான பட்ஜெட் (வரவு செலவுத் திட்ட அறிக்கை) தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பான வரவு செலவுத் திட்ட அறிக்கைத் தாக்கல்செய்தற்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி. இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டிக்குத் தேவையானதைக் கொண்டு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்-முசிறி 4 வழிச்சாலை
விமான நிலையம், துறைமுகம், நீர்வழிச் சாலை உள்பட போக்குவரத்திற்கான ஏழு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையாக இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் நாமக்கல்-முசிறி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. ரயில் மூலம் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களைக் கொண்டுசெல்லவும், சிறு குறு தொழில்களின் பொருள்களைக் கொண்டுசெல்லவும் 'ஒன் ஸ்டேஷன் -ஒன் புராடக்ட்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.