கோவை தொட்டிபாளையம் பிரிவு பூபதி நகர் பகுதியை சேர்ந்தவர் செளந்தர். லேத் பட்டறை உரிமையாளரான இவர், பல்வேறு வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்தார். தொட்டிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மைக்கேல் என்பவர் தனது ஆட்டோ பதிவு சான்றிதழை செளந்தரிடம் அடகு வைத்து அதன் பேரில் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 5 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுத்த நிலையில், தனது வாகனத்தின் பதிவு சான்றிதழை மைக்கேல் திரும்ப கேட்டுள்ளார்.
கோவையில் பைனான்சியர் கொலை! - கடன் பிரச்னை
கோவை: கடன் பிரச்னையில் பைனான்சியர் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆனால், மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாயை திரும்பக் கொடுத்தால் பதிவு சான்று தருவதாக செளந்தர் கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த மைக்கேல், அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தனக்கு ஆதரவாக ஐந்து திருநங்கைகளை அழைத்துக் கொண்டு செளந்தர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் மைக்கேல் தன்னிடம் இருந்த கத்தியால் செளந்தரை குத்தினார். மேலும் தடுக்க வந்த தொட்டிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த இளங்கோவன், கிருபாகரன், அருண் ஆகியோரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்.
காயமடைந்த 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியில் வயிற்றில் ரத்தக் கசிவு அதிகமாக இருந்த நிலையில் செளந்தர் உயிரிழந்தார். மற்ற மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மைக்கேல் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேரையும் தேடி வருகின்றனர்.