கோவை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி முகாமின் செயல்பாட்டை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். இதில் முதல் தடுப்பூசி கோவை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் மருத்துவர் பூமாவுக்கு செலுத்தப்பட்டது. இவருக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது, "உலகத் தரமான மருத்துவ சேவை, உயர்தர மருத்துவ சிகிச்சை, அதிநவீன சிகிச்சை உபகரணங்கள் என தமிழ்நாடு மருத்துவத்துறை சிறந்து விளங்குகிறது. கோவை மாவட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 53 ஆயிரத்து 475 பேரில், இதுவரை 52 ஆயிரத்து 588 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
கோவையில் 40 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு முகாம்களிலும் நாளொன்றுக்கு 100 பேர் வீதம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.