கோயம்புத்தூர்:கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நாகை தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டிற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கையானது இந்த ஆண்டு முதல் நடைபெறுகின்றது.
மாணவர்கள் இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் 9.6.23 வரை ஒரு மாதம் வரை விண்ணப்பிக்கலாம். http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேளாண்மை பல்கலையில் 14 இளங்கலை படிப்புகள், 3 டிப்ளமோ படிப்புகள், மீன் வளப்பல்கலைகழகத்தல் 6 இளம் அறிவியல் பாடங்கள், 3 தொழில் முறை பாடப்பிரிவுகள் என அனைத்துக்கும் ஒரே விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். SC, SCA,ST போன்ற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் 250 ரூபாய் எனவும், மாணவர்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற 24 மணி நேரமும் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொள்ள பிரத்யேக எண்கள், இ-மெயில் முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாகவே அனைத்து மாணவர் சேர்க்கையும் நடைபெறும். பி.டெக் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் என்ற பாடப்பிரிவும், பி.டெக் அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி என்ற இரு பிரிவுகள், புதிதாக இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ளது'' எனவும் தெரிவித்தார்.
இரு பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கையினை ஒரே இடத்தில் நடத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்த அவர், ''பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை ஆகியப் படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பமாக வைக்கத் திட்டமிடப்பட்டதாகவும், அதற்கு சாத்தியமில்லை என்பதால் மீன்வளப் பல்கலை மற்றும் வேளாண் பல்கலை ஆகிய இரண்டிற்கு மட்டும் ஒரே இடத்தில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகின்றது'' எனவும் தெரிவித்தார். அடுத்தாண்டு முதல் நீட் போல கால்நடைப் படிப்புகளுக்கும் தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும் துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
மீன்வள பல்கலைக்கழகத்திற்கு கவுன்சிலிங் இனி, கோவை வேளாண் பல்கலைக்கழகத்திலேயே நடைபெறும் எனவும் ஒரே நாடு, ஒரே தேசம் என்பதற்கான முன்னோட்டமாகவும் இது இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
வேளாண்மை, மீன்வளம் இரண்டில் எந்தப் பாடம் தேவையோ அதை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இது மீன்வள பல்கலைக்கழகத்தின் அதிகாரங்களையோ, துணை வேந்தரின் அதிகாரங்களை குறைப்பதற்கான நடவடிக்கை கிடையாது எனவும்; மாணவர்களின் விண்ணப்பக் கட்டணத்தை குறைப்பதற்கும், விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்துவதற்குமான நடவடிக்கைதான் என அவர் கூறினார்.