கோயம்புத்தூர்:இராமநாதபுரம் 80 அடி சாலையில் கட்சியின் இளைஞர் அணி சார்பில், 10ஆம் ஆண்டு விழா, பொங்கல் நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்விற்கான இலவச வினா விடை புத்தகம் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட த.மா.க தலைவர் ஜி.கே வாசன், மருத்துவ படிப்பிற்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு இலவச வினா - விடை புத்தகங்களை வழங்கினார்.
இதனை அடுத்து, இளைஞர் அணியின் சார்பின் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே வாசன், "கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களிலும் சூயஸ் குடிநீர் குழாய்கள் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும் விரைந்து சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளையும், உக்கடம் ஆற்றுப்பாலம் மேம்பாலப் பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாத அரசாக திமுக அரசு இருந்து வருகிறது.
இன்று (ஜன.7) நடைபெறும் பேச்சு வார்த்தையிலாவது போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்களும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.