கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கே.ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் விக்னேஸ்வரன். இவரது நண்பர்கள் பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன் ஆகியோர் அதே பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர்.
மேலும் ரேக்ளா ரேஸ் ஓட்டுவதும், காளைகளை தயார் செய்வதும் இவர்களுடைய பொழுதுபோக்கு என கூறப்படுகிறது. இவர்கள் கருமத்தம்பட்டி அருகே வடுகபாளையம் பகுதியில் உள்ள குட்டையில் ரேக்ளா காளைக்கு கடந்த சில தினங்களாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நான்கு பேரும் காளையுடன் குட்டையில் குளிக்கச் சென்றபோது, திடீரென விக்னேஸ்வரன் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியபடி தன்னை காப்பாற்றும்படி கையை மேலே தூக்கியுள்ளார்.
இதை கண்ட, நண்பர்கள் விக்னேஸ்வரனை காப்பாற்ற போராடினார். ஆனால் முடியாததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போராடியும் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், குட்டையில் இறங்கி சில மணி நேர தேடுதலுக்கு பின் விக்னேஸ்வரனை சடலமாக மீட்டனர்.