கோவையைச் சேர்ந்த தர்ஷன், ராகுல் ஆகியோர் சாய்பாபா காலனியில் விளம்பர தயாரிப்பு நிறுவனம் நடத்திவருகின்றனர். இவர்கள் தங்கள் தொழில் நிமித்தமாக திருப்பூரைச் சேர்ந்த பைனான்சியர் பிரபாகரனிடம் 30 லட்சம் பணம், 20 லட்ச ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை வாங்கிக் கொண்டு நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் கோவை சென்றனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த நபர்கள் கணியூர் சுங்கச்சாவடி அருகே விபத்தை ஏற்படுத்தி ராகுலை கத்தியால் தாக்கி அவர்களிடமிருந்து பணப்பையை பறித்துச் சென்றனர். இது குறித்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். விசாரணையில் திடீர் திருப்பமாக ராகுல் கையில் இருந்து பறிக்கப்பட்ட பணப்பையில் பணம் எதுவும் இல்லை என்பதும் அதில் வெறும் காகிதங்கள் மட்டும் இருந்தது எனத் தெரியவந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த தர்ஷன், ராகுல் தொழில் நிமித்தமாக திருப்பூரைச் சேர்ந்த பைனான்சியர் பிரபாகரனிடம் சொத்துகளை அடைமானம் வைத்து 50 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். சொத்து ஆவண நகல்களை பெற்றுக் கொண்ட பிரபாகரன் பணபரிவர்த்தனைக்காக கட்டணமாக 2.5 லட்சம் வாங்கிக் கொண்டு 50 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்காமல் தருவதாகக் கூறி இழுத்தடித்துள்ளார்.
இதனையடுத்து தர்ஷன், ராகுல் ஆகியோர் பணம் கேட்டு பைனான்சியர் பிரபாகரனுக்கு நெருக்கடி தந்துள்ளனர். இந்நிலையில், திருப்பூர் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி பிரபாகரன் தர்ஷனிடம் கூறியுள்ளார். அதன்படி அங்கு சென்ற தர்ஷன், ராகுலிடம் பூட்டு போடப்பட்ட பையை பிரபாகரன் கொடுத்துள்ளார்.