தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை மாநகராட்சி அலுவலத்தில் கையூட்டுப் பெற்ற மூவர் கைது! - லஞ்சம் பெற்ற மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது

கோயம்புத்தூர்: ஓய்வுபெற்ற ஊழியரிடம் கையூட்டுப் பெற்ற மூன்று பேரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

bribery
bribery

By

Published : Feb 12, 2021, 8:31 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர் நாகராஜன் (62). இவர் தனது மனைவி சுமதியின் பெயரில் அதே பகுதியில் மூன்று மனைகளை வாங்கியுள்ளார். அதன் பத்திரப் பதிவிற்காக சிங்காநல்லூர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.

இதற்காக அந்த அலுவலகத்தில் நில அளவையாளராகப் பணிபுரியும் நிர்மல்குமாரை அணுகியுள்ளார். இரண்டு மாதங்களாகியும் பட்டா பெயர்மாற்றம் பரிந்துரைசெய்யாமல் நிர்மல்குமார் இழுத்தடித்துள்ளார்.

இந்நிலையில், பிப்ரவரி 9ஆம் தேதி மாலை மாநகராட்சி அலுவலகத்திற்கு நிர்மல்குமாரை நாகராஜன் காண வந்தபோது அவர் அங்கு இல்லாததால் அலைபேசி மூலம் தொடர்புகொண்டுள்ளார். அப்போது அந்த அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நடராஜன் என்பவரிடம் பெற்றுக்கொள்ளுமாறு நிர்மல்குமார் கூறியுள்ளார். பட்டா மாற்ற பரிந்துரைக்கு இரண்டாயிரம் வீதம் ஆறாயிரம் ரூபாய் கொடுக்கச் சொல்லி நடராஜன் கூறியுள்ளார்.

தன்னிடம் தற்போது பணமில்லை என்று கூறிய நாகராஜன் பட்டா பெயர்மாற்றத்திற்கான ஆவணங்களைக் கொடுத்துவிட்டு மறுநாள் காலையில் வந்து பணம் தருவதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து நாகராஜன் லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கிழக்கு மண்டல மாநகராட்சி அலுவலகம் சென்று நிர்மல்குமாரிடம் பணம் கொடுக்க முயன்றபோது அதனை நடராஜனிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

அந்தப் பணத்தை வாங்கிய நடராஜன் அதனை பிரதீப்குமார் என்ற முகவரிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கணேஷ், ஆய்வாளர் கலையரசி, ஆறுமுகம் ஆகியோர் கையும் களவுமாகப் பிடித்தனர்.

விசாரணையில் பிரதீப்குமாரை நில அளவையாளர் நிர்மல்குமார் தனது சொந்த தேவைகளுக்காக முகவராகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்தது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து பிரதீப்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நிர்மல்குமார், நடராஜன், பிரதீப்குமார் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: உதவித்தொகை வழங்க லஞ்சம் கேட்டதால் முதியவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details