கோவை மாவட்டம், கணபதி மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கரண் குமார் (30). இவர் கட்டப்பஞ்சாயத்து வழிப்பறி, கொலை, அடிதடி உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்துள்ளார்.
இவர் மீது கோவை காந்திபுரம், ரத்தினபுரி, பீளமேடு, சரவணம்பட்டி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த கரண்குமார் வருமானமில்லாமல் இருந்துள்ளார்.
இதனால், நேற்று இரவு (டிச.13) கணபதி, நல்லாம்பாளையம் பகுதியில், அவ்வழியாகச் செல்லக்கூடிய நபர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆட்டோவில் வந்த மூன்று பேரை கரண்குமார் வழிமறித்து மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளார்.
மேலும் பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாகக் கூறி கத்தியை எடுத்துள்ளார். இதனால், ஆட்டோவிலிருந்த மூவரும் கரண்குமார் வைத்திருந்த கத்தியை பிடுங்கி கழுத்து முகம் ஆகியப் பகுதிகளில் வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, கொலை செய்த மூவரும் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலைசெய்த மூவரும் அதே பகுதியைச் சேர்ந்த முத்து கணேஷ், ரவி சங்கர், சீனிவாசன் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, ஏற்கனவே ரவுடி கரண் குமாரால் பாதிக்கப்பட்ட இந்த மூவரும் திட்டமிட்டு கொலைசெய்தார்களா, முன் விரோதமா? எனப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:முன்விரோதம்: மதுரையில் ரவுடி படுகொலை!