கோயம்புத்தூர்: சூலூர் அருகே உள்ள காளியாபுரத்தில் பொன்னுச்சாமி என்பவர் தனது நிலத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (செப் 23) தண்ணீர் தொட்டி அமைக்கக் குழி தோண்டிய போது பழங்கால முதுமக்கள் தாழி போன்ற மண் பானை தெரிந்துள்ளது.
அந்த பானையின் மீது ஒரு பலகை வைத்து மூடப்பட்டிருந்த நிலையில் அதைத் திறந்து பார்த்த பொழுது அதில் சில எலும்புகள் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி உடனடியாக இது பற்றி வருவாய்த்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
2 ஆயிரம் ஆண்டு பழமை:தகவலின் பேரில் அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், தொல்லியல் துறை அலுவலர் ஜெயப்பிரியா முன்னிலையில் குழி தோண்டும் பணி நடந்தது. அதில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி மற்றும் சிறு, சிறு மண் பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் தாழியில் இருந்த எலும்புகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, தொல்லியல் துறையினர் கூறுகையில், "கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழி, நான்கு அடி உயரம் உள்ளது. சிறு, சிறு மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையானவை. அனைத்து பொருட்களும் கோவையில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
ஆய்வுக்குப் பிறகே இந்த முதுமக்கள் தாழி எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பது தொடர்பான விவரங்கள் தெரியவரும். அருகாமையில் வேறு ஏதேனும் பழங்கால பொருட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்றனர். மேலும், அங்கு வந்த கோயம்புத்தூர் வருவாய் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் முதுமக்கள் தாழியை கைப்பற்றி விவரங்களைச் சேகரித்த பின் தொடர்ந்து ஆய்வுக்காக முதுமக்கள் தாழியைக் கோவையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர்.