கோவை:நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் 'இரைப்பை மற்றும் குடல் 2023' எனும் மருத்துவ மாநாடு நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி மருத்துவர்கள் கலந்து கொண்டு இரைப்பை சார்ந்த நோய் பாதிப்புகள் மற்றும் அதற்கான நவீன சிகிச்சை முறைகள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பாக சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு இதன் தொடக்க விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விருதுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், கோவிட் காலத்தில் தன்னலமின்றி பாதுகாப்பு இல்லாத சூழலிலும் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி கூறினார். குறிப்பாக, கோவிட் இரண்டாவது அலையின்போது எனது குடும்பத்தினரும் கோவிட் பாதிப்புக்குள்ளான போது பெரும் சிரமங்களை நான் உணர்ந்தேன். இந்த நேரத்தில், தன்னலமின்றி பணியாற்றிய மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
மாலத்தீவில் சிக்கித்தவிக்கும் 12 அப்பாவி மீனவர்கள்:இதனிடையே, மாலத்தீவில் படகுடன் சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழ்நாடு மீனவர்களையும் பத்திரமாக படகுடன் மீட்கக் கோரி, தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்கள் சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடன் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், 'தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த அக்.20 ஆம் தேதி மாலத்தீவு அரசால் சிறைபிடிக்கப்பட்டது. அதோடு, தற்போது மீனவர்களுக்கு ரூ.2 கோடி 27 லட்சம் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதாகவும்; இதனால், மீனவர்கள் மற்றும் ஊர்மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
மாலத்தீவில் இருந்து 12 மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: எனவே, இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் எல்.முருகன், 'மீனவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தூத்துக்குடி மீனவர்களிடம் உறுதி அளித்தார்.
இந்தியாவிலிருந்து 301 பில்லியன் கோவிட் தடுப்பூசி ஏற்றுமதி:தொடர்ந்து பேசிய அவர், 'இந்தியா இளைஞர்களுக்கான புதிய பாரதமாக உருவாகி வருகிறது. ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், கோவிட் காலகட்டத்தின்போது, இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரிக்க அறிவுறுத்தியதில், நாம் வெற்றியடைந்தோம். 301 பில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
உலக நாடுகள் அனைத்தும் இதனால், பயனடைந்ததற்காக நமது நாட்டின் விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி கூற வேண்டும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் மிகக் குறைந்த அளவு தடுப்பூசி தயாரித்தபோது, இந்தியா இதனை நூற்றுக்கும் மேலான பிற நாடுகளுக்கும் அனுப்பி சாதனை புரிந்தது.