கோயம்புத்தூர்: பாரதியார் பல்கலைகழகத்தின் 37 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் 1,687 முனைவர் பட்ட மாணவர்களுக்கும், பல்கலை கழக அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களுக்கும் பட்டங்களும் தங்க பதக்கங்களும் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
மேலும் 1,50,424 இளநிலை பட்டங்கள் 1,504 எம்.பில் பட்டங்கள், 48,034 முதுநிலை பட்டங்கள் என மொத்தம் 2,04,362 மாணவர்களுக்கான பட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , ’இருக்கும் துறையில் அவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக ”நான் முதல்வன்” திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்துகின்றார்.
பட்டம் பெற்றவர்களில் அதிகபட்சம் பெண்களே இருக்கின்றனர் , ஆளுநர் அடிக்கடி பாரதியார் பாடல்களை சொல்லுவார் என குறிப்பிட்டார். மேலும் கல்வித்துறைக்கு தமிழக முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றார் கல்வி, தொழில் துறை ,தொழிலாளர் நலத்துறை இணைந்து படிக்கும் போதே அனுபவங்களை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.
பெண் பட்டதாரிகள் ஆண்களை விட அதிகம் என தெரிவித்த அவர், பெண்கள் படிக்கவே கூடாது என்று சொன்ன காலம் உண்டு, ஆனால் இன்று பெண்களை படிக்க வைக்கின்றார்கள் இதுதான் திராவிட மாடல் ,பெரியார் மண் என பெருமிதம் தெரிவித்தார். நாங்கள் மொழிகளுக்கு எதிரானவர்கள் இல்லை, இந்தி எதிரானவர்கள் அல்ல ,இந்தி திணிப்பு வேண்டாம் என்பதையே கவர்னரின் கவனத்திற்கு சொல்கின்றோம்.