தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வராது என சொல்ல முடியாது - அமைச்சர் மா.சு

”தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வரவே வராது என சொல்ல முடியாது” என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு வராது என சொல்ல முடியாது- அமைச்சர் மா.சு
தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு வராது என சொல்ல முடியாது- அமைச்சர் மா.சு

By

Published : Jul 31, 2022, 7:04 PM IST

Updated : Jul 31, 2022, 8:17 PM IST

கோயம்புத்தூர்:கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆய்வுக்கூட்டம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக்கூட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வராது என சொல்ல முடியாது - அமைச்சர் மா.சு

இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்குப்பிறகு செய்தியாளர்களைச்சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தமிழ்நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினை வேகப்படுத்துவதற்கான ஆய்வு இன்று(ஜூலை 31) நடைபெறுகிறது.

அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களும் பங்கேற்று அனைத்து மருத்துவக்கல்லூரி வளாகங்களில் இதுவரை அவர்கள் மேற்கொண்டு இருக்கிற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடவடிக்கைகள், காத்திருப்போர் பட்டியல், அதற்காக அவர்கள் மேற்கொண்ட விஷயங்கள் ஆகியவை குறித்து கேட்டறியப்படுகிறது.

2008ஆம் ஆண்டு, அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தொடங்கப்பட்டது. அப்போது தான் இந்தியாவை திரும்பிப்பார்க்கும் அளவிற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முக்கியத்துவம் கிடைத்தது. இந்தியாவிற்கே தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தான் வழிகாட்டி அமைப்பாக அமைந்தது.

அன்று முதல் இன்று வரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்ட கொடையாளர்கள் 1524 பேர். இதில் மொத்த உறுப்புகளின் பயன்பாடு 5557, இருதய மாற்று சிகிச்சை 711, நுரையீரல் 676 கல்லீரல் 1404, கணையம் 33 வயிறு 1 சிறுகுடல் 5 கைகள் 4 என 1524 மூளைசாவு அடைந்த கொடையாளர்களிடமிருந்து உறுப்புகள் கிடைக்கப்பெற்று பயன் பெற்றுள்ளது.

கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் இந்தியா முழுவதும் இப்பணிகள் தொய்வடைந்து இருந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை வேகப்படுத்த வேண்டும் எனவும்; கொடையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் இத்திட்டத்தை விரைவுப்படுத்த தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22 முதல் இன்று வரை 13 கொடையாளர்கள் 50 உறுப்புகளை தானம் செய்துள்ளனர். மே 2021 முதல் இந்த அரசு பொறுப்பேற்றது முதல் ஜூலை 2022 வரை உறுப்பு கொடையாளர்கள் 114 பேராக இருக்கின்றனர். 479 உறுப்புகள் இதனால் பயன்பெற்றுள்ளது.

'முதல்வர் காப்பீட்டுத்திட்டத்தின்' கீழ் கடந்த 14 மாதங்களில் மட்டும் 588 பேர் பயன் பெற்றுள்ளனர். சிறுநீரகத்திற்காக விண்ணப்பித்து காத்திருப்போர் 6483, ஈரலுக்காக 380 பேர், இதயம் 43, நுரையீரல் 42 , கணையம் இரண்டு, கைகள் 23 என காத்திருப்போர் பட்டியல் உள்ளது. குரங்கம்மை நோயால் தமிழ்நாட்டில் தற்பொழுது வரை பாதிப்பு இல்லை. குரங்கம்மை நோயால் 80 நாடுகள் தற்போது பாதிப்படைந்துள்ளன.

தமிழ்நாட்டில் திருச்சி மற்றும் நாகர்கோவில் மாவட்டங்களில் தொற்று பரவியதாக வதந்தி பரவியது. அதனை முழுமையாக பரிசோதித்ததில் வேறு பிரச்னை எனத்தெரியவந்தது. அவர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை நெகட்டிவ் என சோதனையில் தெரியவந்துள்ளது. கோவை, திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாதிப்புகள் ஏதேனும் இருப்பினும் அதனை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் பாதிப்பு வராது என சொல்ல முடியாது. பூஸ்டர் தடுப்பூசிகளைப்பொறுத்தவரை மூன்றரை கோடி பேருக்கு போடும் நிலை உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 9.63% பேர்தான். 33ஆவது மெகா தடுப்பூசி முகாம் வரும் ஏழாம் தேதி 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் தான் மருத்துவப்பணியாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. 4,308 காலிப்பணியிடங்களில் நிரப்புவதற்கு தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் 82 லட்சத்து 43 ஆயிரத்து 875 பேர் பயன் அடைந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் உபகரணங்களுக்காக 36 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. இஎஸ்ஐ மருத்துவமனையிலும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மையத்திற்கு ரூ.34.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கோவை அரசு மருத்துவமனையில் மரபியல் மருத்துவத்திற்கு மூன்று ஒப்புரவு மையங்கள் இரண்டு கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 13 லட்சம் செலவில் டயாலிசிஸ் இயந்திரம் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மீட்பு மையம் 53 லட்சம் ரூபாய் செலவில் அமைய உள்ளது” எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட கணவன்,மனைவி போக்சோவில் கைது!

Last Updated : Jul 31, 2022, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details