தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், 2011ஆம் ஆண்டு நில ஆக்கிரமிப்பு வழக்கில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரால் பொய் வழக்கு போடப்பட்ட கோவையைச் சேர்ந்த ஜவகர் என்பவர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட எங்களுடைய குடும்பம் கோவையில் வசித்து வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள என்னுடைய தாத்தாவின் சொத்தை, 2011ஆம் ஆண்டு அருகில் வசிக்கும் தலைமை காவலர் அய்யாக்கண்ணு என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அப்போதைய காவல் ஆய்வாளர் சரவணன் என்பவர் வழக்கை விசாரித்தார்.
பின்னர் அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தற்போது பிரச்னைக்குரிய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ராஜாக்கமங்கலம் காவல் நிலைய ஆய்வாளராகப் பொறுப்பேற்றார். அவர் காவலர் அய்யாக்கண்ணுவிற்கு ஆதரவாக செயல்பட்டது மட்டுமல்லாமல், எங்கள் குடும்பத்தினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைத்தார்.