கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவருக்குத் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்துவருகிறார். பிரபு கடந்த சனிக்கிழமை குடும்பத்துடன் உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 03) அதிகாலை அப்பகுதிக்கு வந்த முகமூடி கொள்ளையர்கள், முதலில் கண்ணன் என்பவரது வீட்டை உடைத்துள்ளனர். கண்ணனின் குடும்பத்தினர் வீட்டின் உள்ளே இருந்து சத்தம் போட்டதையடுத்து, அங்கிருந்து ஓடிய கொள்ளையர்கள் 500 மீட்டர் தொலைவில் உள்ள கார்த்திக் என்பவர் வீட்டையும் கடப்பாறையால் உடைத்து திறக்க முயன்றுள்ளனர்.
அப்போது, அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டதையடுத்து கொள்ளை முயற்சியை கைவிட்டு, கொள்ளையர்கள் தப்பியோடினர். அதனைத்தொடர்ந்து சற்று தொலைவில் உள்ள பிரபு வீட்டை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் யாரும் இல்லாததால் பீரோவை உடைத்து அதிலிருந்து 13 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.